×

2 நாளாகமம் : 22

  • 1 : எருசலேமின் குடிகள், அவன் இளையகுமாரனாகிய அகசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடே கூடவந்து பாளயமிறங்கின தண்டிலிருந்தவர்கள் மூத்தகுமாரரையெல்லாம் கொன்றுபோட்டார்கள்; இவ்விதமாய் அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அரசாண்டான்.
  • 2 : அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.
  • 3 : அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.
  • 4 : அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.
  • 5 : அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடேகூட, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
  • 6 : அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
  • 7 : அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்குத் தேவனால் உண்டான கேடாக லபித்தது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க அபிஷேகம்பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான்.
  • 8 : யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
  • 9 : பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போயிற்று.
  • 10 : அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
  • 11 : ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.
  • 12 : இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.