×

2 இராஜாக்கள் : 15

  • 1 : இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.
  • 2 : அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.
  • 3 : அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
  • 4 : மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
  • 5 : கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
  • 6 : அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 7 : அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  • 8 : யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,
  • 9 : தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.
  • 10 : யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  • 11 : சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 12 : உன் குமாரர் நாலாம் தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று.
  • 13 : யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
  • 14 : காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  • 15 : சல்லூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 16 : அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.
  • 17 : யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
  • 18 : இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.
  • 19 : அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தைத் தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.
  • 20 : இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.
  • 21 : மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 22 : மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  • 23 : யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
  • 24 : கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.
  • 25 : ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  • 26 : பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 27 : யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
  • 28 : கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.
  • 29 : இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
  • 30 : ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  • 31 : பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 32 : இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.
  • 33 : அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
  • 34 : அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
  • 35 : மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
  • 36 : யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 37 : அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.
  • 38 : யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.