×

ஆமோஸ் : 4

  • 1 : சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக்கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
  • 2 : இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.
  • 3 : அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 4 : பெத்தேலுக்குப் போய்த் துரோகம் பண்ணுங்கள். கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,
  • 5 : புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • 6 : ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 7 : இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோயிற்று.
  • 8 : இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 9 : கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 10 : எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 11 : சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டது போல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 12 : ஆகையால் இஸ்ரவேலே, இந்தப் பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
  • 13 : அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.