- 1 : பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்.
- 2 : உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
- 3 : நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,
- 4 : அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
- 5 : அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
- 6 : சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படவன், ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.
- 7 : அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
- 8 : உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக் குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,
- 9 : லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.
- 10 : கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு இணங்கி; அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.
- 11 : அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.
- 12 : அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
- 13 : அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள்.
- 14 : உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும்போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;
- 15 : உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது.
- 16 : அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைச் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
- 17 : அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.
- 18 : அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமைகொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,
- 19 : இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,
- 20 : அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.