- 1 : பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர் கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
- 2 : உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
- 3 : உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.
- 4 : மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
- 5 : அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.
- 6 : நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின் மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,
- 7 : சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,
- 8 : அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.
- 9 : பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும் கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.
- 10 : ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.
- 11 : மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
- 12 : நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
- 13 : சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
- 14 : அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:
- 15 : கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 16 : தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 17 : பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 18 : குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 19 : பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 20 : தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக, ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 21 : யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் எனறு சொல்லக்கடவர்கள்.
- 22 : தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 23 : தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 24 : ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 25 : குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- 26 : இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.