×

யாத்திராகமம் : 17

  • 1 : பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
  • 2 : அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரிட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
  • 3 : ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.
  • 4 : மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
  • 5 : அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
  • 6 : அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
  • 7 : இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரிட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாரா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
  • 8 : அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
  • 9 : அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
  • 10 : யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.
  • 11 : மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
  • 12 : மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
  • 13 : யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
  • 14 : பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
  • 15 : மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
  • 16 : அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.