- 1 : அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.
- 2 : புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி,
- 3 : அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
- 4 : ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,
- 5 : அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,
- 6 : அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,
- 7 : அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.
- 8 : பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.
- 9 : ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைபண்ணுவாயாக.
- 10 : காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.
- 11 : பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,
- 12 : அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
- 13 : குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,
- 14 : காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய; இது பாவநிவாரணபலி.
- 15 : பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
- 16 : அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து,
- 17 : ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து,
- 18 : ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.
- 19 : பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
- 20 : அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
- 21 : பலிபீடத்தின்மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர் மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள் மேலும் தெளிப்பாயாக.
- 22 : அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களையும் மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,
- 23 : கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,
- 24 : அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,
- 25 : பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.
- 26 : ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.
- 27 : மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.
- 28 : அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும்.
- 29 : ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
- 30 : அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக் கொள்ளக்கடவன்.
- 31 : பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.
- 32 : அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.
- 33 : அவர்களைப் பிரதிஷ்டைபண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.
- 34 : பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.
- 35 : இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,
- 36 : பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய்.
- 37 : ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.
- 38 : பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
- 39 : ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.
- 40 : ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக.
- 41 : மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய்.
- 42 : உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
- 43 : அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
- 44 : ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,
- 45 : இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.
- 46 : தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.