×

ஆதியாகமம் : 11

  • 1 : பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
  • 2 : ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
  • 3 : அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
  • 4 : பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
  • 5 : மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
  • 6 : அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
  • 7 : நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
  • 8 : அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
  • 9 : பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
  • 10 : சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
  • 11 : சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  • 12 : அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
  • 13 : சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  • 14 : சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
  • 15 : ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  • 16 : ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
  • 17 : பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  • 18 : பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
  • 19 : ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  • 20 : ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
  • 21 : செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  • 22 : செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
  • 23 : நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  • 24 : நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
  • 25 : தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  • 26 : தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
  • 27 : தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.
  • 28 : ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.
  • 29 : ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிரகாமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இல்க்காளுக்கும் தகப்பன்.
  • 30 : சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
  • 31 : தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
  • 32 : தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.