×

ஆதியாகமம் : 24

  • 1 : ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார்.
  • 2 : அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:
  • 3 : நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;
  • 4 : நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்.
  • 5 : அதற்கு அந்த ஊழிக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான்.
  • 6 : அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
  • 7 : என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
  • 8 : பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்.
  • 9 : அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.
  • 10 : பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,
  • 11 : ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
  • 12 : என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும்.
  • 13 : இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையில் நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே.
  • 14 : நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
  • 15 : அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்தவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள்.
  • 16 : அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
  • 17 : அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.
  • 18 : அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
  • 19 : கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி;
  • 20 : சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.
  • 21 : அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.
  • 22 : ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுத்து,
  • 23 : நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான்.
  • 24 : அதற்கு அவள்: நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,
  • 25 : எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள்.
  • 26 : அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு,
  • 27 : என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.
  • 28 : அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள்.
  • 29 : ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.
  • 30 : அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.
  • 31 : அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.
  • 32 : அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான்; லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.
  • 33 : பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான்.
  • 34 : அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்.
  • 35 : கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
  • 36 : என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
  • 37 : என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்,
  • 38 : நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று அணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.
  • 39 : அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,
  • 40 : அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.
  • 41 : நீ என் இனத்தாரிடத்திற்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண் கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.
  • 42 : அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,
  • 43 : இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது:
  • 44 : நீ குடி என்றும், உன் ஓட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.
  • 45 : நான் இதை என் இருதயத்தில் சொல்லிமுடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்றேன்.
  • 46 : அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.
  • 47 : அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்கு காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;
  • 48 : தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
  • 49 : இப்பொழுது நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.
  • 50 : அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம்பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது.
  • 51 : இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.
  • 52 : ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைமட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
  • 53 : பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடமைகளையும், பொன்னுடமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.
  • 54 : பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.
  • 55 : அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள்.
  • 56 : அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
  • 57 : அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி,
  • 58 : ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
  • 59 : அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,
  • 60 : ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
  • 61 : அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக் கொண்டுபோனான்.
  • 62 : ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான்.
  • 63 : ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.
  • 64 : ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,
  • 65 : ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
  • 66 : ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.
  • 67 : அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.