×

ஆதியாகமம் : 32

  • 1 : யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
  • 2 : யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.
  • 3 : பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:
  • 4 : நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,
  • 5 : எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான்.
  • 6 : அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறுபேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.
  • 7 : அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து:
  • 8 : ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.
  • 9 : பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
  • 10 : அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
  • 11 : என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.
  • 12 : தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.
  • 13 : அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக,
  • 14 : இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
  • 15 : பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,
  • 16 : வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையை தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி,
  • 17 : முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
  • 18 : நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்.
  • 19 : இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,
  • 20 : இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.
  • 21 : அந்தப்படியே வெகுமதி அவனுக்கு முன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,
  • 22 : இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.
  • 23 : அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
  • 24 : யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
  • 25 : அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
  • 26 : அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
  • 27 : அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
  • 28 : அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
  • 29 : அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
  • 30 : அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
  • 31 : அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.
  • 32 : அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.