×

நியாயாதிபதிகள் : 15

  • 1 : சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:
  • 2 : நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான்.
  • 3 : அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,
  • 4 : புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,
  • 5 : பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத் தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டான்.
  • 6 : இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான். அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள். அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.
  • 7 : அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி,
  • 8 : அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.
  • 9 : அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.
  • 10 : நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.
  • 11 : அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய், பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.
  • 12 : அப்பொழுது அவர்கள்: உன்னைக் கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்கச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.
  • 13 : அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல் உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக்கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
  • 14 : அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம்பண்ணினார்கள்; அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன்புயங்களில் கட்டிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று.
  • 15 : உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.
  • 16 : அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.
  • 17 : அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையிலிருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத்லேகி என்று பெரிட்டான்.
  • 18 : அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையில் விழவேண்டுமோ என்றான்.
  • 19 : அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.
  • 20 : அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.