- 1 : ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டு மந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
- 2 : அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
- 3 : பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
- 4 : இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
- 5 : அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
- 6 : அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.
- 7 : அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
- 8 : தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
- 9 : பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின் மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
- 10 : இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின் மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
- 11 : அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம்.
- 12 : அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
- 13 : அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
- 14 : அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
- 15 : இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
- 16 : ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.
- 17 : கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.