×

சங்கீதம் : 103

  • 1 : என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
  • 2 : என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
  • 3 : அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
  • 4 : உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
  • 5 : நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
  • 6 : ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
  • 7 : அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
  • 8 : கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
  • 9 : அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
  • 10 : அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
  • 11 : பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
  • 12 : மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
  • 13 : தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
  • 14 : நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
  • 15 : மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.
  • 16 : காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
  • 17 : கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
  • 18 : அவருடைய உடன்படிக்கையைக்கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
  • 19 : கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.
  • 20 : கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
  • 21 : கர்த்தருக்குப் பிரியமானதைச்செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
  • 22 : கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.