×

சங்கீதம் : 35

  • 1 : கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
  • 2 : நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும்.
  • 3 : என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.
  • 4 : என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.
  • 5 : அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
  • 6 : அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
  • 7 : முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
  • 8 : அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
  • 9 : என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
  • 10 : சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
  • 11 : கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
  • 12 : நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்.
  • 13 : அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.
  • 14 : நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்து கொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.
  • 15 : ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.
  • 16 : அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்து கொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.
  • 17 : ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
  • 18 : மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
  • 19 : வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
  • 20 : அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
  • 21 : எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ, ஆ, ஆ, ஆ எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
  • 22 : கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.
  • 23 : என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
  • 24 : என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
  • 25 : அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ, ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
  • 26 : எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
  • 27 : என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
  • 28 : என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.